• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்..,

ByKalamegam Viswanathan

Mar 5, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது.

மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர். தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது. தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.