ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு கடுமையான போர் மூண்டிருக்கிறது.
ஈரான் மீதான தாக்குதல் அந்த நாட்டில் மட்டுமின்றி அருகிலுள்ள வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கத்தார், பஹ்ரைன், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பும் அடுத்தடுத்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஐக்கிய அரபு அமிரகத்தில் 40 லட்சம் பேர், சவுதி அரேபியாவில் 28 லட்சம் பேர் உள்பட வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர்.
ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய சூழலில் போர்க்காலங்களில் சாத்தியமாகும் வழிமுறைகளை பின்பற்றி வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வளைகுடா நாடுகளின் அரசுகளை இந்தியா கேட்டுக்கொள்ள வேண்டும்.
போர் நடைபெறும் பகுதிகளில் அந்த நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்பினரால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடைபிடித்து இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உலகில் எந்த சிக்கலுக்கும் போர் தீர்வல்ல என்பதும், போரால் ஏற்படும் நன்மைகளை விட அழிவுகளே அதிகம் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், போரை கைவிட்டு அமைதிப் பேச்சுகளின் மூலம் அணு ஆயுத தயாரிப்பு சிக்கலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட நாடுகள் முன்வர வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







