கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தி.மு.க அரசுக்கு எதிராக உரையை நிகழ்த்தினார்.
குறிப்பாக, கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.

“கட்சியை யார் ? வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் மக்களுக்காகப் போராட வேண்டும்” என்று தொடங்கிய எஸ்.பி.வேலுமணி, “எம்.ஜி.ஆர் நடிகராக இருந்ததால் முதல்வர் ஆகவில்லை, நல்லவர் என்பதால் மக்கள் அவரைத் தேடி வந்தனர்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “கரூரில் த.வெ.க கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்குக் காப்பற்றக் கோரிப் போராடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்குப் பேசிக் கொண்டு இருந்தவர், பின்னால் இறங்கி நேராக கரூர் விமான நிலையத்திற்குச் சென்று விட்டார். சினிமாவில் கேமரா முன்பு நடித்து விட்டுச் செல்வது போல இதுவும் ஆகிவிட்டது” என விஜய்யை நேரடியாக தாக்கினார்.

விஜய் குறித்துத் தனிப்பட்ட முறையில் பேசிய வேலுமணி, “விஜய் எனக்கு நல்ல நண்பர் தான். ஒரு படத்தின் வெளியீட்டுச் சிக்கலின் போது நான் தான் அவரை எனது காரில் அழைத்துச் சென்று எடப்பாடியாரிடம் பேச வைத்தேன். அதன் பிறகு தான் அந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது. நட்பு என்பது வேறு, ஆனால் 41 பேர் உயிரிழந்த போது அவர்களைப் பார்க்காமல் விட்டு, விட்டுச் சென்றவரை எப்படித் தலைவனாக ஏற்க முடியும் ?” என கேள்வி முன் வைத்தார்.
“கொரோனா உச்சத்தில் இருந்தபோது எடப்பாடியார் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்றார். நான் அமைச்சராக இருந்த போது கொடிசியாவில் படுக்கை வசதிகள் செய்தோம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்றினோம். ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொரு வீட்டிற்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு சேர்த்தோம். ஒரு மகனாக, தந்தையாக, சகோதரனாக அந்தப் பணியைச் செய்தோம். ஆனால் தன் கட்சிக்காரர்களே உயிருக்குத் துடிக்கும் போது விட்டுச் செல்பவர் வந்தால் நாளை நாடு எப்படி இருக்கும்?” எனச் சிந்திக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, “அ.தி.மு.க வைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது தி.மு.க விற்கே வாய்ப்பாகிவிடும். தி.மு.க எவ்வளவு ? மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்துத் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்” எனத் தொண்டாமுத்தூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.






