கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன்,சர்மிளா,
ரமேஷ் அகிய 3 பேரும் முகத்தில் அ.தி.மு.க கட்சி துண்டை கட்டிக் கொண்டு கூட்ட அரங்கின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்தும் வெளியேறும் துர்நாற்றம் கோவை புதூர் வரை அடிப்பதாகவும், துர்நாற்றம் காரணமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.மேலும் குப்பை அள்ள தனியாருக்கு கான்டிராக்ட் விட்டநிலையில், மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு எதற்கு வாகனம் வாங்கி தரப்படுகின்றது எனவும் இதற்காக மக்கள் பணம் 25 கோடி செலவு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களை சி.பி.ஐ மூலம் விசாரணை நடத்த உத்திரவிட வேண்டும் எனவும் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் பின்னர் மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட 119 தீர்மானங்களில் ஒரு தீர்மானம் தவிர மற்றவை அனைத்தும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தெரிவித்தார். 64வது தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 55 சமுதாயக் கூடம் மற்றும் கல்யாண மண்டபங்களை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு
ஒப்பந்த புள்ளி கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த ஒரு தீர்மானம் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல முத்தண்ணன் குளம் பகுதியில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட (turf) மைதானத்தை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சாந்தி எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அவரது எதிர்ப்பையும் மீறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










