• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360..,

BySeenu

Jan 29, 2026

கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதியில் முத்திரை பதித்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள்’ வழங்கப்பட்டன. இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுகளில் முதலிடம் பிடித்த 5 நிறுவனங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ்களைத் துணை முதலமைச்சர் வழங்கினார். மேலும், 10 நிறுவனங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்தப் பெறப்படும் வங்கி கடன்களுக்கு 2% வட்டி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு நூற்பாலைக்கு ரூ.11.70 லட்சம் வட்டி மானியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

அதேபோல், சாதாரண விசைத்தறிகளை நவீன ரேப்பியர் தறிகளாக மாற்றவும், புதிய தறிகள் வாங்கவும் 12 விசைத்தறியாளர்களுக்கு மொத்தம் ரூ.67.49 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.துணி நூல் பதனிடும் பிரிவில் புதிய ஆலைகள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் முன்வந்த 3 நிறுவனங்களுக்கு மூலதன முதலீட்டு மானியமாக சுமார் ரூ.1,092 கோடி வழங்க அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.இது ஜவுளித் துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அகலமான துணி அச்சிடும் இயந்திரங்கள் வாங்கிய 2 நிறுவனங்களுக்கு ரூ.38.35 லட்சம் மானியம்.ஆயத்த ஆடை பிரிவில் தானியங்கி துணி வெட்டும் இயந்திரம் வாங்கிய 3 நிறுவனங்களுக்கு ரூ.142.94 லட்சம் மானியம்.பல்லவாடா தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா நிறுவனத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.1.30 கோடி மானியம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் 6 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.138.32 லட்சம் நிதியுதவி.

இந்த மாநாட்டின் மூலம் கோவையின் ஜவுளித் தொழில் உலகத் தரத்திற்கு உயரும் என்றும், குறிப்பாகச் செயற்கை இழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி (Technical Textiles) பிரிவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும் என்றும் துணை முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.