கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தினை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, நிபின் (29) என்பவர், மறைத்து வைத்து இருந்த 6 கிலோ 140 கிராம் எடை உள்ள தங்கக் கட்டிகள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கொண்ட விசாரணையில், நிபின் என்பவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் பணி புரிந்து வருவதாகவும், கடை உரிமையாளர் ரஹ்மான் (42) என்பவர், மேற்கண்ட தங்கக் கட்டிகளை கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொடுத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
*மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், மேற்படி சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் மேல் நடவடிக்கைக்காக வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக, சட்டவிரோதமான கடத்தல் மற்றும் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் தொடர்பாக தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தி உள்ளார்.






