அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அரசியல் கட்சியின் விளம்பர இடங்களாக மாறிவிட்டதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக சார்ந்த பேனர்கள் ஆலய வளாகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேனர்களால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும், பக்தர்களின் மனஉளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சாலையோரம் மற்றும் கோயிலின் நுழைவாயில்களுக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேனர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பலமுறை காவல் நிலையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நினைவு அஞ்சலி பேனர் ஒன்றை கோயில் இடத்திலேயே வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

விபத்துகள் ஏற்படும் முன்பாகவும், ஆலயத்தின் புனிதத்தன்மையை காக்கும் வகையிலும், விளம்பர நோக்கில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






