கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம், நெசவாளர் சேவை மையம்-சேலம் சார்பில் இணைந்து நடத்திய, நெசவாளர்களுக்கான நெசவாளர் அடையாள அட்டை என்றழைக்கப்படும் “பேச்சான் கார்டு” வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேலம் மத்திய அரசு நெசவாளர் சேவை மையம் இனை இயக்குனர்
கார்த்திகேயன் நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இதில், சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவன தலைவர் கைத்தறி முருகேசன், பழனிவேல், ராஜாராம், மோப்பிரியபாளையம் பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நெசவாளர்களுக்கு அங்கீகார அட்டை வழங்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக நெசவாளர் அடையாள அட்டை குறித்து சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவன தலைவர் கைத்தறி முருகேசன் கூறியதாவது..

நெசவாளர் அடையாள அட்டை என்பது, தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்காக அரசால் வழங்கபடும், ஒரு முக்கிய ஆவணமாகும், இது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள், மற்றும் கடனுதவிகளைப் பெறுவதற்கு உதவுகிறது, மேலும் நெசவாளர்களுக்கான அரசாங்க நலத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்புப் பலன்களை அணுகுவதற்கும் இந்த அட்டை அவசியம் என்றார்.
மேலும், நெசவாளர் அடையாள அட்டையின் முக்கியத்துவமாக அரசு நலத்திட்டங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நெசவாளர்களுக்கான வீடு வசதி, சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பலன்களைப் பெற உதவுகிறதாகவும் கூறினார்.
தொடர்ந்து முத்ரா போன்ற கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், வங்கிக் கடன்கள் பெறவும் இந்த அட்டை பயன்படுகிறது.

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையாகவும் இதனை பயன்படுத்தலாம் எனவும், இது நெசவாளர்களைப் பதிவு செய்வதற்கும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும் உதவுகிறது என எடுத்துரைத்தார்






