முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நடந்த போராட்டத்தில் மனம் வருந்தி விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் ஜனவரி 14 ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார்.
தமிழ்நாடே பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் பகுதி நேர ஆசிரியரின் மரணம், ஆசிரியர் சமுதாயத்தையே உலுக்கியிருக்கிறது.
தமிழ்நாடே பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் N.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் விஷம் அருந்தி உயிரிழந்துவிட்டார்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வேண்டும், மே மாதம் ஊதியம் வேண்டும் என திமுக 2021 இல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வந்தனர். சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முற்றுகை போராட்டம் ஜனவரி 8ந்தேதி முதல் நடத்தி வந்தனர்.
ஆனால் காவல்துறை இதனை முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்து சொல்லி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் என பரிந்துரைக்காமல், கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.
இந்த போராட்டத்தில் ஜனவரி 13 ஆம் தேதி கலந்துகொண்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணன் கைது செய்யப்பட்டபோது விஷம் அருந்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி மாலை அவர் மரணம் அடைந்துவிட்டார்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் நம்மிடம் கூறும்போது,
“வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால் இந்த மரணம் நடந்து இருக்காது.இந்த போராட்டமும் நடந்து இருக்காது.
எனவே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மரணத்தில் இருந்து காத்திட பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் உயிர் இழந்த கண்ணன் ஆசிரியர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதியும் மற்றும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனே வழங்க வேண்டும்.
ஜனவரி 14 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கூடுதலாக மொத்தம் 15 ஆயிரம் ரூபாயும், மே மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்றும் அறிவித்துள்ளார்.
வெறும் 2,500 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு நாங்கள் போராட வில்லை என்பதை கண்டனத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே இந்த அறிவிப்பானது வெறும் கண்துடைப்பு, அதுவும் காலம்கடந்த அறிவிப்பு என கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கிறது. ஆனால் பணி நிரந்தரம் செய்ய மனம் இல்லையா?
மத்திய அரசு பணம் தரவில்லை என்று சாக்குபோக்கு சொல்வது இனியும் ஏமாற்றாமல் முதல்வர் சொன்ன திமுக வாக்குறுதி 181ஐ அரசாணையிட்டு பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை வெளியிட வேண்டும். இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னதெல்லாம் பொய் தானா? விரைவில் விரைவில் என பள்ளிக்கல்வி அமைச்சர் பொய்மொழி சொன்னாரே? அது எப்போது? வீதியில் நிற்கின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு நீதி இல்லையா? வாக்குறுதி கொடுத்த முதல்வரை சந்திக்கவே முடியவில்லை என்றால் என்ன ஆட்சி இது?” என்று வேதனையோடும் கோபத்தோடும் பேசினார் செந்தில்குமார்.





