பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் (Sarah Heit) மற்றும் துணை மேயர் கிளிஃப் (Cliff) ஆகியோர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் அவர்களுக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேயர் சாரா ஹீட் மற்றும் அவரது குழுவினர் மதுரையின் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டிடக்கலை, கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயல்பாடுகளைப் பார்வையிட ஆர்வமாக உள்ளனர்.
மேலூர் பகுதியில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் விவசாயிகளுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடவும், அலங்காநல்லூர் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காணவும் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் கூறுகையில்:
வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முறையாக வரவேற்க மதுரை மாநகராட்சி தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். மதுரையின் விருந்தோம்பல் பண்பிற்கு இது ஒரு பின்னடைவு.
தனது பயணம் குறித்துப் பேசிய மேயர் சாரா ஹீட் கூறுகையில்:

“தமிழ் மக்களின் அன்பான வரவேற்பும் உபசரிப்பும் என்னை நெகிழச் செய்துள்ளது. மதுரையின் கலாச்சாரத்தை அறியவும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காணவும் நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
இந்த பயணத்தின் மூலம் மதுரை மற்றும் லண்டன் இடையிலான கலாச்சார உறவுகள் மேம்படும் என்றும், மதுரையை ஒரு ‘இரட்டை நகரம்’ (Twin City) திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.




