கோவையில் 9.67 கோடி ரூபாயில் தயாரான ஹாக்கி மைதானத்தை விரைவில் துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் ஏராளமான ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால் இவர்கள் பயிற்சி பெற மாநகராட்சி அல்லது அரசு சார்பில் மைதானம் அமைக்கப்படவில்லை, இதனால் கோவையில் அரசு சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் கோவை, ஆர்.எஸ் புரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக வெளிநாட்டுகளில் இருந்து சிந்தடிக் டர்ப் (செயற்கை பொருட்கள்) வர வழைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த மைதானம் அமைக்கப்படாமல், பாதியில் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இதனால் ஹாக்கி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஹாக்கி மைதானத்தை மீண்டும் தயார் செய்ய மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹாக்கி மைதானம் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் ரூபாய் 9.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை அடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மைதான பணிகள் வேகம் அடைந்தன. அனைத்து பணிகளும் முடிவு அடைந்து திறப்பு விழாவிற்கு மைதானம் தயாராகிவிட்டது. இந்த மைதானம் 6,500 சதுர அடி பரப்பளவு கொண்டது. மைதானத்தை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவிலும் இங்கு ஹாக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின் கோபுர விளக்குகள் உள்ளன.
இதில் ஒவ்வொரு மின் கோபுர விளக்கிலும் 500 வாட்ஸ் திறன் கொண்டது. 20 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் வீரர்கள், வீராங்கனைகள் உடைகள் மாற்றும் அறைகள், ஓய்வறை, கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டு உள்ளது. ஹாக்கி மைதானத்திற்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. சிந்தடிக் டர்ப் அமைக்கும் பணி சமீபத்தில் முடிவு அடைந்தது அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், விரைவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக அங்கு பெயிண்ட் அடித்தல், மேடை அமைக்கும் பணிகள் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த மைதானம் கோவை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.




