தெற்கு இரயில்வேக்கான பயணிகள் ஆலோசனைக் குழு கூட்டம் தெற்கு இரயில்வே பொதுமேலாளர் ஆர். என். சிங் தலைமையில் நடைபெற்றது.

தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நானும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டோம்.
இன்றைய கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டிருந்தது.
- அதில் நமது நீண்ட நாள் கோரிக்கையான மதுரை வழியாக மங்களூரு – இராமேஸ்வரம் வாராந்திர ரயிலை வடக்கு கேரளா பகுதிக்கும் , மங்களூருக்கும் மதுரையிலிருந்து நேரடி இணைப்பு பெறும் வண்ணம் விரைந்து இயக்க கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கோரிக்கையை ஏற்று.. மதுரை வழியான இந்த மங்களூரு – இராமேஸ்வரம் வாராந்திர ரயில் இயக்கப்படும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்று தெற்கு ரயில்வே இந்த கூட்டத்தில் பதிலளித்துள்ளது.
- அதே போல் பல காலமாக மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு போதுமான இணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது…எனவே திருச்சி வரை இயங்கும் திருச்சி – ஜோத்பூர் ஹம்சஃபர் ரயிலையும் , திருச்சி – ஸ்ரீகங்காநகர் ஹம்சஃபர் ரயிலையும் மதுரை வரை நீட்டித்து இயக்க கோரிக்கை விடுத்திருந்தேன்..எனது கோரிக்கை ஏற்கப்பட்டு இந்த ரயில்களை மதுரை வரை இயக்க ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- கூடல் நகர் ரயில் நிலையத்தில் போதுமான இருக்கைகள் இல்லை என்பதை கடந்த கூடல் நகர் ஆய்வின் போது கண்டறிந்து, கூடல் நகரில் கூடுதல் இருக்கைகள் அமைக்க கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கையும் ஏற்கப்பட்டு விரைவில் கூடுதல் இருக்கைகள் கூடல் நகரில் அமைத்து தரப்படும் என தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது.
- அதே போல் பயணியர் நிழற்குடைகள் போதுமானதாக இல்லாத சிலைமான், சமயநல்லூர் , திருப்புவனம் ரயில் நிலையங்களுக்கு வேண்டிய வசதிகளை ஆவண செய்து தருமாறு நான் விடுத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டு அந்த ரயில்வே நிலையங்களுக்கு கூடுதல் நிழற்குடைகள் விரைவில் அமைத்து தரப்படும் எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மையம் கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினேன். உடனே நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் உறுதியளித்தார்.
மதுரை, கோவை, நெல்லை, இராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட இரயில் நிலையங்கள் இடநெருக்கடியால் புதிதாக எந்தவொரு இரயிலையும் இயக்கமுடியாத நிலையை இரயிவே துறை மீண்டும், மீண்டும் சொல்லுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகள், புதிய இரயில் முனையங்கள் அமைப்பதற்கான எந்த திட்டமிடலையும் செய்யாமல் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டு இரயில் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் மோசமான நிலையை நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இது தமிழ்நாட்டின் ரயில்வே துறை, பொது வளர்ச்சிக்கு மிக அபாயகரமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக, புறவழி ரயில்பாதைகளை, புதிய ரயில்நிலையங்களை உருவாக்குவது மிக முக்கியத் தேவை. இதனை செய்ய தெற்கு ரயில்வேவுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கினால் மட்டுமே சாத்தியம். கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததன் மிகமோசமான கட்டத்தை தெற்கு ரயில்வே சந்தித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.




