திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் வதிலைச் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்சியின் கொடியானது, தேசியத் தலைவர்களுடன் சேர்த்து முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையா தேவர், சுபாஷ் சந்திரபோஸ், வேலுநாச்சாயார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவப் படங்கள் முன்பாக வைக்கப்பட்டு, வழிபாடு செய்த பின் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் தங்கவிருமன், வழக்கறிஞர் விஜயகாந்த், நாகராஜ், அழகுமுருகன், வடுவார் ரோஸ் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து திருப்பூர் தங்கதுரை, நாகப்பட்டினம் வெங்கடேஷ், புதுக்கோட்டை நாகேஷ், கரூர் வில்வா, தென்காசி நாகராஜ், விருதுநகர் சங்கர், ராம்நாடு கர்ணன் உட்படப் பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் வதிலைச் செல்வம், புதிய கட்சியின் நோக்கங்கள் குறித்துத் தெரிவித்தார்: “இந்தக் கட்சியானது ஜாதி மதங்களைக் கடந்து அனைவருக்கும் பொதுவான கட்சியாக உருவெடுத்துள்ளது.” தமிழர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவது. தமிழர்களின் உணர்வுகளை தேசிய அளவில் எடுத்துச் செல்வது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது.கட்சியின் அடிப்படை நோக்கம், தமிழகத்தில் நிலவும் அடிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, தமிழர்களுக்கான தன்மானத்தை உருவாக்குவதுதான் என்று வதிலைச் செல்வம் உறுதியாகக் கூறினார்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் தகவல் அளித்தார் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கட்சியின் பொதுக்குழு முடிவின்படி, மதுரையில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாடு நடத்தப்படும். இந்தக் கட்சியின் மாநாட்டில், தமிழர் தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.”தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் தமிழர் தேசிய கட்சியானது இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாக உருவெடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.




