• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வீடுகளின் கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம் திருநங்கைகள் வேதனை..,

ByKalamegam Viswanathan

Dec 6, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி கட்டப்புலி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக சுமார் 400க்கும்
மேற்பட்ட வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 195 வீடுகளுக்கான கட்டுமான பணிகளுக்கான அமைச்சர் மூர்த்தி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார்.

இந்த பணிகள் தை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கையால் பயனாளிகளுக்கு நேரில் வழங்கப்படும் என அப்போது அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்..

இந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே பணிகள் நடைபெற்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழைநீர் புகுந்ததால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகளை பார்வையிட முடியாமல் தவித்து வருவதாகவும் பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில்,

சுமார் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டிற்கு தமிழக அரசு சார்பில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 3. 5 லட்சம் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் மீதி தொகையும் விடுவிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு எங்களுக்கு வீடு ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மூன்று கட்ட தொகை ஒதுக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதி தொகை விடுவிக்கப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது.

மேலும் பணிகள் நடைபெற்ற பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி
இருப்பதால் மாற்றுத்திறனாளிகளான எங்களால் ஒதுக்கப்பட்ட வீட்டின் பணிகளை பார்வையிட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் நிலையை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை உடனடியாக விடுவித்து கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வீடுகளை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

மேலும் மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் தை மாதத்திற்குள் வீடுகளை எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அரைகுறையாக பணிகள் நடைபெற்ற வீட்டில் எங்களால் குடியிருக்க முடியாது.

தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.