காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணாக்கரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுபோல் இவ்வாண்டு காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அறிவியல் கண்காட்சி காரைக்கால் கல்வித்துறை சார்பில் கோவில்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட சார்பு ஆட்சியர் பூஜா. இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து மாணவர்கள் காட்சிப்படுத்திய அறிவியல் படைப்புகளை சார்பு ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு படைப்புகளின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மாணவர்கள் காட்சிப்படுத்திய அறிவியல் படைப்புகளில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் கருவி, விவசாய பல்நோக்கு கருவி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் அறிவியல் படைப்புகள், சோலார் பேனல்களை கொண்டு மின்சாரம் தயாரித்தல், இயற்கை விவசாயம், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையிலான அறிவியல் படைப்புகள் என பலவகையான அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 267 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மண்டல அளவில் நடைபெற்ற இக்கண்காட்சியானது இன்று தொடங்கி 05.12.2025 அன்று முடிவடைய உள்ளது இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மேல்நிலை கல்வி துணை இயக்குனர் திருமதி.ஜெயா, முதன்மை கல்வி அதிகாரி திருமதி. விஜய மோகனா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.








