• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-டிஆர்பி ராஜா..,

BySeenu

Nov 26, 2025

கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே போல் தமிழகத்தில் எங்களுக்கு ஏன் தருவதில்லை என சில சலசலப்பு ஆங்காங்கே இருந்து வந்தது. நான் கடந்த 2024ம் ஆண்டு கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக வந்த பிறகு மக்கள் தெரிவித்த கருத்தை முதல்வரிடம் கொண்டு சென்றோம். அப்போது அரசுக்கும் தொழில் தொடங்குவோருக்கும் சிறிய இடைவெளி இருந்தது தெரியவந்தது. அதன் பின்பு முதல்வர் ஒவ்வொரு முறையும் மக்கள் நலத்திட்டங்களை வகுக்கும் போதும், அதனை செயல்படுத்தும் விதமும் சிறப்பாக உள்ளது. ஒருவர் முதலீடு செய்ய வரும்போது முதல் நாளிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டியாக அரசு செயல்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு அரசு மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் இவ்வளவு பெரிய மாநாட்டை தற்போது நடத்த முடிந்தது. சக்தி, எல்எம்டபிள்யூ, பிரிகால் போன்ற நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது என சொல்லலாம். இந்த மாநாட்டின் மூலம் 42 ஆயிரத்து 742 கோடி ரூபாய் பெரு நிறுவனங்கள் மூலமும், எம்எஸ்எம்இ மூலம் 1052 கோடி ரூபாய் என 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுவர். பொருட்கள் தயாரிப்பு, சர்வீஸ் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆர்என்டி ஆராய்ச்சியை பொறுத்தவரை ஒட்டு மொத்த இந்தியாவுக்கான ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழும். குறிப்பாக சென்னையும், கோவையும் திகழும்.

தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு தோறும் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடிக்கின்றனர். அவர்களுக்கு உயர் தர வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் முதலீடு பெறப்பட்டு வருகிறது. கோவையில் அதற்கான ஏற்ற சூழல் உள்ளது. எல்காட் டெண்டர் ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சில வாரங்களில் இன்னும் ஒரு முக்கியமான அறிவிப்பு நமது பகுதிக்கு வர இருக்கிறது. டிசம்பர் 7ம் தேதி மதுரையில் டிஎன்ரைசிங் நடக்க உள்ளது. அங்கும் மிக முக்கியமான அறிவிப்பு இருக்கும். உலகத்தில் எந்த உதிரிபாகமாக இருந்தாலும் தமிழ்நாட்டிலும் தயாரிக்கலாம். இதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறோம்.

தொழில் நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைவதுதான் நமது நோக்கமாக உள்ளது. இதேபோல் யோசித்து, யோசித்து எந்த முதல்வரும் செய்தது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் என்ன தேவையோ? அதனை தேடி, தேடி முதல்வர் செய்கிறார். செமி கண்டக்டர் தயாரிப்பு தொடர்பான எல்லா முதலீடும் தமிழ்நாட்டிற்கு தான் வருகிறது. பெரிய நிறுவனங்களின் மூச்சு காற்றே சிறு, குறு நிறுவனங்கள் தான். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கையை சிறு, குறு தொழில் துறை அமைச்சர் செய்து வருகிறார்.

இவ்வாறு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.