கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதிவிளை செல்லும் சாலையில் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 4740 அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி இன்று (23.11.2025) 7-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி சட்டமன்றத்தின் உறுப்பினர் தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூர் கழக செயலாளர் ஸ்ரீனிவாசன், மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

டாஸ்மாக் கடை அருகில் இருப்பதால் மாணவ–மாணவிகள் பாதுகாப்பு, பெண்கள் நடமாட்டம், பொதுமக்கள் சிரமம் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் வெளிப்படுத்தினர்.
முன்னாள் எம்பி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் நாஞ்சில் வின்சன்ட் உள்ளிட்ட மாவட்ட, மாநகர், ஒன்றியம், நகரப் பகுதி கழக நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து, இன்று காலை அமராவதிவிளை RC திருச்சபை முன்பு நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தில் அருள் தந்தைகள், ஊர் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.









