மதுரையை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்து உள்ளார். இந்த மாணவி நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்று உள்ளார். இவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்தி உள்ளனர். இரவில் 11 மணி அளவில் காரை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு 3 பேர் வந்து உள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நிறுத்தப்பட்டு இருந்ததால், அவர்கள் அதன் அருகே சென்று உள்ளனர். உள்ளே கல்லூரி மாணவி, தனது நண்பருடன் இருந்ததை கண்டதும், மர்ம நபர்கள் அவர்களை வெளியே வர கூறி உள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கையை கண்டு அஞ்சிய மாணவியும், அவரின் நண்பரும் வெளியே வர அஞ்சி தப்பிச் செல்ல முற்பட்டு உள்ளனர். தொடர்ந்து மிரட்டிய மர்ம நபர்கள், காரை தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்து உள்ளனர்.
அச்சத்துடன் ஆண் நண்பர் வெளியே வந்ததும் அவரின் தலையில் கொடுவாள் மூலம் தாக்கி உள்ளனர். தலையில், பலத்த அடிபட்டதும் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். அதைக் கண்டு மாணவி உயிர் பயத்தில் அஞ்சி நடுங்கி உள்ளார். உடனே, மூன்று பேர் கும்பல் கத்தி முனையில் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் தூக்கிச் சென்று மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் இதை அடுத்து, அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து அங்கு நடந்த அட்டூழியம் குறித்து தகவல் தெரிவித்து உள்ளார்.
உடனே விமான நிலைய பகுதி போலீசார் உஷார்படுத்தப்பட்டதும், ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளார்.
காயத்துடன் இருந்த மாணவியின் ஆண் நண்பரை மீட்ட போலீசார், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். புதர் மண்டிய பகுதியில் சல்லடை போட்டு தேடியதில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாணவி அலங்கோல நிலையில் கிடந்ததை கண்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆடையின்றி பரிதவித்த அப்பாவி பெண், அங்கு இருந்து வெளியேற முடியாமல் அதிகாலை 4 மணி வரையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்து உள்ளார். பின்னர், பாதுகாப்பாக அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அத்துடன், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்து உள்ளார்.
இதன் இடையே பிருந்தாவன் நகர் காட்டு பகுதியில் தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். சம்பவம் நிகழ்ந்த பகுதியின் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதற்கு இடையில், ஆண் நண்பரின் கார் பீளமேடு காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை இருந்து உள்ளது. அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மது குடிக்க பலரும் வந்து சென்று உள்ளனர்.

இதனால், சமூக விரோதிகள் நடமாடும் பகுதியாக பிருந்தாவன் நகர் மாறி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தற்போது, நள்ளிரவில் அங்கு வந்த 3 பேர் கும்பல் குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளது.
பிருந்தாவன் நகரில் காரில் பேசிக் கொண்டு இருந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு, அவருடன் இருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்து, அவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த காட்டுப் பகுதியில் கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடுத்து சூறையாடி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)