ரயில் முன்பதிவு பயண சீட்டு பெற, ரயில் கால அட்டவணை அறிந்து கொள்ள, முன்பதிவில்லாத பயணச்சீட்டு பதிவு செய்ய முறையே ஐ. ஆர். சி. டி. சி., என். டி. இ.எஸ்., யூ.டி.எஸ். மொபைல் என இதுவரை தனித்தனி செயலிகள் (Applications) பயன்பாட்டில் இருந்து வந்தன.

இதை ஒருங்கிணைத்து பயணிகளின் வசதிக்காக ஒரே செயலியாக “ரயில் ஒன்” என்ற புதிய செயலி ஜுலை 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் முன்பதிவு பயண சீட்டுகள், தட்கல் பயண சீட்டுக்கள், முன்பதிவு இல்லாத பயண சீட்டுக்கள், நடைமேடை அனுமதி சீட்டு, சீசன் டிக்கெட் ஆகியவற்றை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரயில் கால அட்டவணை, இரு ரயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்படும் ரயில்களின் விபரம், குறிப்பிட்ட ரயில் கடக்கும் ஊர், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் வந்து போகும் ரயில்கள் விபரம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
ரயிலில் அல்லது ரயில் நிலையத்திலிருந்து காலை, மதிய, இரவு உணவுகளை ஏற்பாடு செய்து கொள்வது, ரயில் பயணக் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு பதிவது, பயண சீட்டு பதிவிற்க்கான மின்னணு பண பரிமாற்றத்திற்கு ஆர்-வாலட்டில் பணம் சேமித்துக் கொள்வது, “ரயில் மதாத்”தில் குறைகளை பதிவு செய்வது, செயலி செயல்பாடு பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகளையும் இந்த “ரயில் ஒன்” செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.
முன்பதிவு பயணச்சீட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்து உறுதி செய்யப்பட்ட பயணமாகிவிட்டதா மற்றும் ஒரு ரயிலின் குறிப்பிட்ட ரயில் பெட்டி, ரயில் தொடரில் எந்த இடத்தில் இருக்கிறது போன்ற தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். பயணி தனது சுய விவரங்களையும், புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிட்டு எளிதாக சீசன் டிக்கெட் பெற முடியும். முன் பதிவில்லாத பயணச்சீட்டு வழக்கம்போல ரயில் நிலையத்திற்கு வெளியேயும், ரயில் நிலையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள கியூஆர் கோட் -ஐ ஸ்கேன் செய்து ரயில் நிலையத்திற்குள்ளும் பதிவு செய்து கொள்ளலாம். பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பயணிகள் பெயர்களை ஏற்கனவே சேமித்து வைத்துக் கொண்டு அதை எளிதாக எடுத்து பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். தட்கல் பயணச் சீட்டு பதிவிற்கு ஆதார் அடையாள அட்டையையும் தங்கள் “ரயில் ஒன்” கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.
வருங்காலத்தில் இந்த செயலி பயணிகள் ரயிலில் பார்சல் பதிவு செய்வது, சரக்கு ரயில்களில் சரக்கு பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது. செயலியில் ‘கோ டூ வேவ்ஸ்’ என்ற பகுதிக்கு சென்று ஓ.டி.டி. தளத்தில் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றை ரயில் பயணத்தின் போது பார்க்கலாம். ஏற்கனவே ஐ. ஆர். சி. டி. சி. மற்றும் யூ. டி. எஸ். மொபைல் செயலிகளை பயன்படுத்துவோர் அவர்கள் பயன்படுத்தி வரும் பயனாளர் பெயர் மற்றும் சங்கேத சொல் ஆகியவற்றை “ரயில் ஒன்” செயலியிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.