தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அ்ப்போது, வல்லநாடு கீழத்தெரு கோமு மனைவி சரஸ்வதி (55) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் வந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், தனது மகன் உத்தண்டராமன், மருமகன் சிந்தாமணி முறப்பநாடு போலீசார் பொய் வழக்குப் பதிந்து குண்டர் சட்டத்தில் அடைத்து விடுவதாக மிரட்டியதால் தான் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். பின்னர் போலீசார் அவர் வைத்திருந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்திகள் பத்திரிகையாளர்கள் பதிவுசெய்தபோது பிஆர் ஓ நவீன் பாண்டியன் என்பவருடன் சேர்ந்து மற்றும் ஒருசிலர் பத்திரிகையாளர்களை போட்டோ எடுக்க விடாமல் தடுத்தனர். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..