• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆட்சியில் பங்கு…

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி!

தமிழக காங்கிரசில் சமீப காலமாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற உரிமைக் குரல்கள் அதிகரித்துள்ளன.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை தேசிய தலைமையும் கூட்டணித் தலைமைக்கும் தெரிவிப்போம் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் அடிக்கடி பேசி வருகிறார்.

இந்நிலையில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ராஜேஷ்குமாரை ’நமது அரசியல் டுடே’ இதழுக்காக சில கேள்விகளுடன் சந்தித்தோம்!

கரூர் கொடூர சம்பவம் குறித்த உங்களது பார்வை என்ன?  

முன்னாள் பிரதமர், தலைவர் ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்ட சோகத்தை விட பெரிய சோகமாக கரூர் சோகத்தைப் பார்க்கிறேன். இத்தகைய உயிர் பலிக்கு காரணமான விபத்து பற்றிய செய்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கு எட்டிய அடுத்த நிமிடமே இரவு வேளையிலும்

தலைமை செயலகம் வந்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு நேரத்திலே கரூருக்கே சென்று,  மரணம் அடைந்தவர்களின் குடும்ப உறவுகளை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன முதல்வரின் செயல்  உயர்ந்த மனித நேயம் மிக்கது.  

தமிழக காங்கிரஸ் தலைவர் உடன் நீங்களும் கரூர் சென்றிருந்தீர்களே…

கரூர் மக்களவை உறுப்பினர் தங்கை ஜோதிமணி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துடி, துடிப்புடன் ஓடிய அந்த நொடிகளை,அவரது பதற்றத்தை இப்போது நினைத்தாலும் என் நெஞ்சம் பதைபதைக்கிறது.

தமிழக காங்கிரஸ் சார்பாக பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு  ரூ.1 கோடியை பகிர்ந்து கொடுக்க  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி, எங்கள் மாவட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர்  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் வேதனையை நேரில் சந்தித்து ஆறுதல் உடன் நிதியையும் கொடுத்து வந்தோம்.  

இந்த விபத்தின் அடிப்படை காரணம். விஜய் அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் 7 மணி நேரம் காலம் கடந்து வந்ததுதான்.

தன்னை பார்க்க வந்து நெரிசலில் சிக்கி மரணம் அடைந்த நிலையில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களின் வீடுதோறும் செல்ல வேண்டாம்….. குறைந்த பட்சம் மனித நேயம் இருந்தால் மருத்துவமனைக்காவது சென்று பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களிடம் ஆறுதல் சொல்லியிருக்கலாம். அதை கூட சொல்லாது சென்னைக்கு திரும்பியது விஜய்யின் மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம்.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ் திருப்தியோடுதான் பயணிக்கிறதா?

தமிழக அரசியல் பயணத்தில் கடந்த 9 ஆண்டுகள் திமுக உடன் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒரே அணியில் பயணிக்கிறோம்.

அரசின் செயலை சில சமயம் காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகள் சுட்டி காட்டும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான முடிவை எடுத்து வருவது திமுக கூட்டணியின் பெரிய பலம். அதனால் திமுக கூட்டணியில் திருப்தியோடுதான் பயணிக்கிறோம்.  அதேநேரம் நாளை என்ன நடக்கும் என்பது குறித்து சொல்ல எனக்கு ஆருடம் தெரியாது.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு அதிக இடங்கள் வேண்டும் என தொடர்ந்து நீங்கள் பேசி வருகிறீர்களே…

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் உடன் மேற்கொள்ளும் ஆலோசனை, அன்னை சோனியா, இளம் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கும் கருத்துக்களையே தமிழக காங்கிரஸ் பின் பற்றும்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரின் எண்ணம் மட்டுமே அல்ல விருப்பமும் கூட. எங்கள் எண்ணத்தை பல்வேறு சூழல்களில் பொது வெளியில் பதிவு செய்து வருகிறோம்.

சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது உள்ள 3 தொகுதிகளை விட கூடுதலாக தொகுதி கேட்க்கும் எண்ணம் உள்ளதா.?

தேர்தல் தேதி அறிவிக்கட்டும் அதற்குப்பின், உங்கள் எல்லா கேள்விகளுக்கும் விடை  தானாகவே கிடைக்கும்” என நழுவினார் ராஜேஷ்குமார்.