கிட்னி திருட்டு, திருப்பரங்குன்றம், கரூர் சம்பவம், ஆம்ஸ்ட்ராங் மரணம் என அடுத்த அடுத்து தி.மு.க-விற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவை மிகவும் வரவேற்கத்தக்கது என, பா.ஜ.க மாநில செயலாளர் வினோத் பி. செல்வம் தெரிவித்தார்.

கோவை வடக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் கோவை வடவள்ளி முல்லை நகர் சந்திப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து.
பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வினோத் பி. செல்வம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே. செல்வகுமார், இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் கிருஷ்ண பிரசாத், மாவட்ட பொதுச் செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.
தொடரந்து மாநில செயலாளர் வினோத் பி. செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில், தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தோல்வியடைவதில் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். அதில் சுகாதாரத் துறை தோல்வியில் முதல் இடத்தில் உள்ளது. கிட்னி திருட்டில் தொடங்கி, இருமல் சிரப் தயாரிப்பில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு அவல நிலை தொடர்ந்து நடைபெறுகிறது.

தி.மு.க-விற்கு சந்திராஷ்டம் போல் அமைந்து உள்ளது. கிட்னி திருட்டு தொடர்பாக உண்மை கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீ்ர்ப்பு வழங்கி உள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் மலை பகுதியில் ஆடு, கோழி வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. அதே போல் கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை நீதிமன்ற விசாரிக்க வேண்டிய வழக்கை சென்னை நீதிமன்றம் ஏன் விசாரித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மரணம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என அடுத்தடுத்து திமுக-விற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அ.தி.மு.க கூட்டத்தில் தவெக கொடி காட்டப்பட்ட சம்பவம் என்பது தி.மு.க-விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேரலாம் என்ற சூழல் உருவாகி கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.