தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி உள்ளவர், உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர். ஆனால், எடப்பாடியார் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் அவர். ‘சின்னம்மா, சின்னம்மா’ என்று சொன்னவர் இப்போது அப்படிச் சொல்வதில்லை,” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
“நோயாளி என்று சொல்வதற்குப் பதிலாக பயனாளி என்று சொல்வதில் என்ன தவறு? காலத்திற்கு ஏற்ப மொழி வளர்ச்சி அவசியம். ஆனால், எடப்பாடியாருக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லும் அவருடைய தமிழ் ஆற்றல் அவ்வளவுதான். முதல்வரைக் குறை கூறுவதற்கு முன் யோசிக்க வேண்டும்,” என்று ஏ.வ.வேலு காட்டமாகப் பதிலளித்தார்.

மேலும், பெயர் வைப்பது குறித்து எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு விளக்கமளித்த அவர், “மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராசர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. பெயர் வைப்பதில் யாருக்கும் கருத்து இருக்கக் கூடாது. ஆனால், எம்ஜிஆர் பெயரைச் சொல்ல பயப்படுபவர்கள் எதிர்க்கட்சியினர். ஸ்டாம்ப் சைஸில் கூட எம்ஜிஆர் படத்தைப் போடாதவர்கள் அவர்கள்,” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, “அதிமுக ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம். செம்மொழி பூங்காவை கலைஞர் அறிவித்தபோது, அதைச் செயல்படுத்தாதவர்கள் நீங்கள். ஆனால், ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர். அதிமுக அறிவித்த திட்டமாக இருந்தாலும், 5 சதவீதப் பணிகளை மட்டுமே முடித்திருந்தீர்கள். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அதிமுக தான்,” என்று குறிப்பிட்டார்.
ஜி.டி.நாயுடு பெயர் சர்ச்சை குறித்து: ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, “பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், “அதிமுகவின் கூட்டணி வலுவானதா, நஞ்சு போனதா, தோற்கும் கூட்டணியா என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், இந்த முறையும் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.