சுற்றுலா மற்றும் பயணத் துறை நிபுணர்களுக்கான சர்வதேச அமைப்பான ஸ்கால் கிளப்-ன் கோவை பிரிவு சார்பில் சுற்றுலாத் துறையில் டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், மத்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து டாக்ஸி ஓட்டுநர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

ஸ்கால் கிளப் கோவை பிரிவின் தலைவர் ரமேஷ் சந்திரகுமார் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிரபல கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக அர்ஜுன் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் ரவி அர்ஜுன் அவர்கள் பங்கேற்று டாக்ஸி ஓட்டுநர்களிடையே உரையாற்றினார்.
“நீங்கள் டாக்ஸி ஓட்டுநர்கள் மட்டுமல்ல, கோயம்புத்தூர் சுற்றுலாவின் தூதுவர்கள்” என்று அவர் கூறினார். அதையடுத்து அவர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்கவழக்கங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டதோடு, தனது அனுபவத்தைக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

மத்தியச் சுற்றுலாத் துறையின் தென் மண்டல இயக்குநர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர், ரமேஷ் சந்திரகுமார் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். ஸ்கால் கிளப்பின் கோவை கிளை, டாக்ஸி ஓட்டுநர்களுக்கான இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நடத்துவதாக அவர் தெரிவித்தார். இதற்கு முன் 70 ஓட்டுநர்கள் இந்த கருத்தரங்கு /பயிற்சிபட்டறையில் பங்கேற்ற நிலையில், இப்போது அது 250 ஆக அதிகரித்துள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார்.
ஓட்டுநர்கள் வெறும் வாகனங்களை இயக்குபவர்கள் மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள். விமானம் அல்லது ரயில் மூலம் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலில் சந்திக்கும் நபர்கள் அவர்கள்தான். எனவே, சுற்றுலாத் துறையில் தங்கள் பங்கையும் பொறுப்பையும் அவர்கள் அறிந்திருப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
இன்றைய நிகழ்வின் பேச்சாளர் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த புகழ்பெற்ற சுற்றுலாத் துறை நிபுணர் என்றும், அவரது அமர்வு ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஸ்கால் கிளப் கோவை சார்பில் நடைபெறும் என்றும், சில அமர்வுகள் நீடித்த நிலையான சுற்றுலா தொடர்பான தலைப்புகளையும் உள்ளடக்கும் வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.