திமுக எம்எல்ஏ அண்ணன் கைது?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சண்முகையா.
அரசியல் பின்னணி ஏதுமில்லாமல் வந்து தற்போது அவருடைய குடும்பத்தில் பலரும் பதவிகள் மூலம் நிலவளம், பொருளாதார பலம் என பெற்றுவருகின்றனர். இந்நிலையில், தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சண்முகையா மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக செம்மரக்கட்டை, சிலைக்கடத்தல், காற்றாலை மற்றும் சோலார் நிறுவன சர்சைகளுகளுக்கிடையே தற்போது கூடுதலாக கடம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுமார் 210 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்து அபகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காப்புலிங்கப்பட்டி மற்றும் பரிவில்லிக்கோட்டை கிராமங்களில் சென்னையைச் சேர்ந்த பால் சோலார் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின் பங்குதாரராக அழகப்பன் மற்றும் பாலையா ஆகியோர் உள்ள நிலையில் கடந்த 2020ல் இருபங்குதாரரில் ஒருவரான பாலையா என்பவர் இறந்துவிட்டார். அந்நிறுவனத்தின் பங்குகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் அந்நிறுவன மேலாளர் சுவாமிநாதன் கண்காணிப்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.
இத்தகைய சூழலில் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான அயிரவன்பட்டி முருகேசன் என்பவர் இறந்த பாலையா அவர்களுடைய மகன் ஆனந்தகுமார் பெயரில் போலி உயில் ஆவணங்களை உருவாக்கி, கடம்பூர் சார் பதிவாளர் சரகத்திற்கு உட்பட்ட காப்புலிங்கப்பட்டி மற்றும் பரிவில்லிக்கோட்டை கிராமத்திலுள்ள சுமார் 210 ஏக்கர் நிலத்தை மோசடியாக எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
சோலார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை மோசடியாக அபகரித்துள்ளதாக ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான அயிரவன்பட்டி முருகேசன், கடம்பூர் சார்பதிவாளர், அலுவலக உதவியாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சரோஜா, உமா மகேஸ்வரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சோலார் நிறுவன கண்காணிப்பாளரான சுவாமிநாதன் என்பவரால் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “சென்னை வேளச்சேரியை அலுவலகமாக கொண்ட பால் சோலார் எனர்ஜி நிறுவனம் மத்திய அரசின் அனுமதியுடன் பல்வேறு தொழில்முதலீடுகளை செய்து வருகின்றன.
மேலும் தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி,விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சோலார் அமைக்கும் பணிக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பாலையா மற்றும் அழகப்பன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து நிலங்களை வாங்கியுள்ளனர். கடந்த 2020ல் பாலையா என்பவர் இறந்த நிலையில் அவருடைய வாரிசுகளை தொடர்பு கொண்ட ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான அயிரவன்பட்டி முருகேசன் மேற்படி நிலங்களை தொழிற்முறை பங்குதாரர்களுக்கு தெரியாமல் பாலையா என்பவரின் மகனான ஆனந்தகுமார் பெயரில் போலி உயில் ஆவணங்களை தயார் செய்து, பாலையா மனைவி சரோஜா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோரைக் கொண்டு மொத்தமாக 210 ஏக்கர் நிலங்களை 18 பத்திரமாக மாற்றியிருக்கிறார்கள்.
காப்புலிங்கப்பட்டி மற்றும் பரிவில்லிக்கோட்டை கிராமத்திலுள்ள சோலார் நிறுவன நிலங்களை போலி ஆவணங்களாக மாற்றிட கடம்பூர் சார் பதிவாளர் மற்றும் எழுத்தர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் தொழிற்பங்குதார்களின் மற்றும் சோலார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்தோடு ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய அண்ணனான அயிரவன்பட்டி முருகேசன் செயல்பட்டுள்ளதாகவும் போலி ஆவணங்களை ரத்து செய்வதோடு உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்” என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து புகார் பெறப்பட்ட தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “அயிரவன்பட்டி முருகேச ன் தொடர்ச்சியாக பல நிலமோசடி புகார் நிலுவையில் உள்ளன. இந்த புகார் மனுவை அடுத்து உரியவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் எட்டையபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த மாடத்தி என்பவரின் நிலத்தை கேட்டு மிரட்டிய வழக்கில் இதே முருகேசன் சிறை சென்ற நிலையில் தற்போது ₹15 மதிப்பிலான சுமார் 210 ஏக்கர் நிலமோசடியில் மீண்டும் கைது செய்யப்படலாம்” என்றனர்.
மேலும் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய அண்ணனான அயிரவன்பட்டி முருகேசன் உள்ளிட்டோர் மீதான புகார்களை தைரியமாக வெளிக்கொண்டு வரும் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவரிடம் பேசும்போது,
“மக்களின் நலன்களை புறந்தள்ளி விட்டு எம்எல்ஏ மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் கூட்டாக சேர்ந்து காற்றாலை மற்றும் சோலார் நிறுவனங்களிடம் எப்படி வசூலை வாரி சுருட்டலாம், அரசு திட்ட நிதியிலிருந்து எவ்வாறு கமிஷன் பெறலாம் என்பதையே கடந்த ஐந்தாண்டுகால திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு மத்தியில் தான் கடம்பூர் அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி மற்றும் பரிவல்லிக்கோட்டை கிராமத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 210 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரித்துள்ளதாக தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது.
கடந்த மாதங்களில் இத்தகைய புகாரின் அடிப்படையில் சிறைச் சென்ற திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான அயிரவன்பட்டி முருகேசன் மீண்டும் மீண்டும் தொடர் நிலமோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவது பொதுமக்களின் வெறுப்பானது எம்எல்ஏ சண்முகையா மீது மட்டுமல்லாது ஆளுங்கட்சியான திமுக மீதும் எழத் தொடங்கியுள்ளது” என்பதே நிதர்சனமான உண்மை என்றார்.
இந்நிலையில் 210 ஏக்கர் நிலமோசடி விவகாரத்தில் கடந்த 27.09.2025 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அன்றைய விசாரணையில் புகார்தாரர், கடம்பூர் சார் பதிவாளர், முருகேசன் ஆகியோர் ஆஜரானார்கள்.
போலி ஆவணங்களை ஏற்படுத்தியதற்கு உடந்தையாக இருந்த கடம்பூர் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஆனந்தகுமார், உமா மகேஸ்வரி, சரோஜா ஆகியோருடன் இன்று அக்டோபர் 1 ஆம் தேதியும் எம்.எல்.ஏ.வின் அண்ணன் முருகேசனினிடம் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.வின் அண்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே போலீஸ் வட்டாரத்தின் லேட்டஸ்ட் தகவல்.
