விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோடத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் டிஎஸ்பி பாஸ்கர் ஆலோசனையின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த நிலையில் சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தட்டி பாண்டியன், மற்றும் போலீசார் கந்தபுரம் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து காரையும் சோதனை செய்தனர். அப்போது காரில் இரும்பு ராடுகள், திருப்புளி, மடக்கு கத்தி, குரங்கு குல்லா, கையுறை ஆகியவை இருந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பழனி குமார் (42), மதுரை கே.புதூரை சேர்ந்த மணிகண்டன் (32), மதுரை பழங்காநத்தம் சக்திவேல் (21), மதுரை ஜெய்ந்த்புரம் கருப்பசாமி (21) என தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் சிவகாசி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற போது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபடு முயன்ற 4 பேரை கைது செய்த இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்இன்ஸ்பெக்டர் பால முரளிகிருஷ்ணா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை டிஎஸ்பி பாஸ்கர் பாராட்டினார்.
