விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எட்டக்காபட்டி, ராமுதேவன்பட்டி, கண்டியாபுரம், வால்சாபுரம் அன்னபூரணியாபுரம் , செவல்பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே விவசாய நிலங்களில் உழவு செய்ய தயாராக இருந்தது. தற்போது மழையின் காரணமாக சிறு கிழங்கு, சேனைக்கிழங்கு, வெண்டைக்காய், சீனி அவரைக்காய், பயிரிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அன்னபூரணியாபுரம் விவசாயி கருப்பசாமி கூறியது..,
வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மூன்று முறை, நான்கு முறை நிலங்களை உழவு போட்டு தயார் நிலையில் வைத்துள்ளோம். மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, பயிரிடும் பணியை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழை, இன்னும் தொடர்ச்சியாக மழை பெய்தால் பயிர்கள் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். மழையின் காரணமாக கண்மாயில் தண்ணீர் பெருக வாய்ப்புள்ளதால் சேனைக்கிழங்கு, சிறு கிழங்கு, சீனி அவரைக்காய், வெங்காயம், வெண்டைக்காய், உள்ளிட்டவைகள் பயிரிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளது. முழுமையாக பெய்தால் விவசாயத்திற்கு நல்ல பலன் தரும் என கூறினார்.