குல தெய்வ கோவிலில் நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கிடாவெட்டி சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் உள்ள குல தெய்வமான கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன், அவரது சகோதரரும், இயக்குநருமான செல்வராகவன், தந்தை கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி, மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோர்களும் குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று ஆண்டிபட்டி அருகே முத்து ரங்காபுரத்தில் உள்ள கஸ்தூரி அம்மன் கோவிலில் சாமி வழிபாடு செய்த தனுஷ் அங்குள்ள ரசிகர்கள் மற்றும் கிராம பொதுமக்களை சந்திக்காமல் சென்றதற்கு கிராம மக்கள் வருத்தம் தெரிவித்த நிலையில், இன்று சங்கராபுரத்தில் பொது மக்களை செல்பி எடுக்க வைத்தும், குழந்தைகளை கொஞ்சி தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தனுஷ் பொதுமக்களையும், ரசிகர்களையும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் சந்தித்து சென்றார். பின்னர் கோயில் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் தனது குடும்பத்தார் மற்றும் சங்கராபுரம் கிராம மக்கள் உடன் உணவருந்தினார்.
தனியார் மண்டபத்தில் கிராம மக்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
படம் வெளியானதுக்கு முன்பாக ஆண்டிப்பட்டி மற்றும் போடி சங்கராபுரத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த தனுஷ் தற்போது படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில், பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது போடி சங்கராபுரம் கோயிலில் கிடா வெட்டி கிராம மக்களுடன் தனுஷ் குடும்பத்தாருடன் உணவருந்தி சென்றுள்ளார்.