கோவை கரும்புகடை பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் , இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்தும்,இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஏற்பட்ட கோர பாதிப்பை விளக்கும் விதமாக தலை, கை,கால்களில் கட்டுப்போட்டபடியும் குழந்தைகளின் சடலங்களை கையில் சுமந்திருப்பதை போன்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலை நடத்தும் இஸ்ரேலை கண்டித்தும், இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனையடுத்து பேட்டியளித்த அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் ஹமீது,காசாவில் செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்று சென்ற சர்வதேச பத்திரிக்கையாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், மருத்துவ பணிகள் செய்யச் சென்ற தன்னார்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்ப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அங்கு மனித உரிமைகளை விரும்பும் நபர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர் எனவும் கூறியதுடன் கொடூர தலைவரான ஹிட்லரை மிஞ்சும் அளவிற்கு இஸ்ரேல் பிரதமர் இருப்பதாகவும், அவருக்கு துணையாக அமெரிக்க அதிபர் இருப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் இருவருக்கும் ஆதரவாக இந்திய நாட்டின் பிரதமர் மோடி இருக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
இரண்டு வருடங்களில் லட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதை கண்டித்து ஒருமுறை கூட இந்திய பிரதமர் அறிக்கை விடவில்லை என தெரிவித்த அவர், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் கொல்லப்படுவதை பிரதமர் மோடி ரசிக்கிறார் என்று எண்ண தோன்றுகிறது எனவும் விமர்சித்தார்.
இது காந்தி தேசம் என்பது உண்மை எனில் இஸ்ரேலுடன் இருக்கும் உறவை உடனடியாக இந்தியா துண்டிக்க வேண்டும் எனவும் இந்தியாவில் இஸ்ரேலிய தூதரகத்தை மூட வேண்டும் எனவும் தூதரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியதுடன், அரசு உடனடியாக இதனை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்ததன் காரணமாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.