குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது, லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடமணிந்து ஊர் ஊராக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான நேற்று நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலில் தன் வேடத்துடன் வந்த சூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிம்மம், எருமை மற்றும் சேவல் முகத்துடன் வந்த சூரனையும் அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்பின்னர் சூலாயுதம் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை காண்பதற்காக கடற்கரையில், நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார நிகழ்வையும் கண்டு களித்தனர். நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.
2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார். அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமை மில். சுமார் 4000 போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில். பத்திரிகை யாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.