மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

தினசரி உசிலம்பட்டிக்கு வேலைக்கு வந்துவிட்டு வீடு திரும்பும் இவர் நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், அதிகாலை எழுந்து பார்க்கும் போது அதே ஊரில் மாற்று சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் சுப்பிரமணி இறந்து கிடந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சுப்பிரமணியின் சமுதாயத்தினருக்கும், மாற்று சமுதாயத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டாரா என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலையில் தடுப்புகளை அமைத்து மறியல், உடலை எடுக்க விடாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் உதவியுடன் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பேரையூர் வட்டாச்சியர் செல்லப்பாண்டி தலைமையிலான வருவாய்த்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டு உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.