தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1200.க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பள்ளியின் கேட்டை திறந்து சரக்கு வாகனம் மற்றும் டூவீலரில் சில நபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி பள்ளி மாணவர்கள் பின் தொடர்ந்து சென்று மறைந்திருந்து பார்த்தபோது மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த புத்தகங்கள் அறையைத் திறந்து கட்டுக்கட்டாக புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பள்ளி மாணவர்கள் மறைந்திருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். பள்ளியில் இருந்த பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை ஏற்றிய பின்பு அந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வீடியோ எடுத்த பள்ளி மாணவர்கள் பள்ளியின் இரவு காவலரிடம் எதற்காக இரவு நேரத்தில் அரசு பள்ளியில் இருந்த பாட புத்தகங்களை எடுத்துச் செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு பள்ளியில் இரவு நேரத்தில் பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை எடுத்துச் சென்ற வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..