கரூரில் நடந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்கள் ஆத்மா அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவம் நம் சமூகத்தின் பொறுப்புணர்வையும் நிர்வாக ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே இதே பகுதியில் மூன்று கூட்டங்கள் நடைபெற்றுள்ளன; அந்த மூன்றிலும் TVK கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சரியான முறையில் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், வரிசைப்படுத்தவும் காவல்துறையை மட்டும் நம்பாமல், கட்சி நிர்வாகிகளும் தங்கள் பங்கு பொறுப்புடன் ஏற்றிருக்க வேண்டும்.

இது அந்த ஒரு கட்சிக்கே மட்டும் பொருந்தாது; இனி வருங்காலங்களில் எந்த அரசியல் கட்சி, அமைப்பு அல்லது பொது இயக்கம் கூட்டம் நடத்தினாலும், இந்த ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு முன்பும் அதே இடத்தில் அதிமுக உள்ளிட்ட பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன; அவை எவ்வாறு ஒழுங்காக நடந்தன என்பதையும் புதிய கட்சிகள் உணர வேண்டும். மக்கள், குறிப்பாக இளம் வயதினர், நடிகரை அல்லது தலைவரை பார்க்கும் ஆர்வத்தில் கூட்டத்தில் சேருவதை முன்கூட்டியே அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
இனி இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாதவாறு அரசு, காவல் துறை, கட்சித் தலைமை மற்றும் பொது அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் எங்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மனித உயிரின் மதிப்பு அரசியலையும் பிரிவினைகளையும் தாண்டி மேலானது என்பதை அனைவரும் உணர வேண்டிய நேரம் இது என்று தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் சார்பாக
மாநிலத் தலைவர் க.திருமுருகன் தெரிவித்துள்ளார்.