உலக நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், லண்டன்வாழ் தமிழர் தனுராஜ், வெண்கலப் பதக்கம் வென்றார்.

சென்னை தொழில் வர்த்தக மையத்தில் தென்னிந்திய சமையற்கலைஞர்கள் சங்கம் (SICA) சார்பில், 7வது சமையல்கலை சார்ந்த ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டன. நிகழ்வில், ஆஸ்திரேலியா, துபாய், ஜெர்மனி, இங்கிலாந்து, வியட்னாம், மொரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
3 நாட்கள் நடைபெற்ற நிகழ்வில், அவர்களது நாட்டு பாரம்பரிய உணவுகளைத் தயாரித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டன. சமையலுக்குப் பயன்படும் காய்கறி, பழங்களைக் கொண்டு அழகிய சிற்பங்கள் வடிவமைத்தல் போட்டியும் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் லண்டன் வாழ் தமிழரான, சமையல் கலைஞர் தனுராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை உலக அளவில் பிரபலமான சமையல் கலை நிபுணர்கள் வழங்கினர்.
பரிசு பெற்ற சமையல் கலைஞர் தனுராஜை தென்னிந்தியச் சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் செப் தாமு, பொதுச்செயலாளர் என்.சீத்தாராம் பிரசாத் மற்றும் அவருக்குப் பயிற்சி அளித்த காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.