• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரெஸ்ட் ரூம் போனா கூட உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா?   ஊடகங்களை எகிறிய எடப்பாடி

Byவிஷா

Sep 23, 2025

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி டெல்லி சென்று, துணை குடியரசுஹ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது காரில் முகத்தைத் துடைத்தபடி வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதை படம் பிடித்த டெல்லி பத்திரிகையாளர் நிரஞ்சன், ‘அமித் ஷாவை சந்தித்த பின் முகத்தை மூடிக் கொண்டு எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டார்’ என்று  வீடியோ வெளியிட்டார்.

இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு சமூக தளங்கள் முழுதும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பதிவுகள் இடம்பெற்றன. அமமுக பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் எடப்பாடியை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் சேலத்தில்  செப்டம்பர் 18 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார்.

“பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த சுற்றுப் பயணத்தின்போது கிடைத்த வரவேற்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை உணர்த்தி இருக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட்டு அதிமுக ஆட்சி 2026-ல் அமையும்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி காட்டினார், கருப்பு பலூன் விட்டார். ஆனால், திமுக ஆளும் கட்சியான பிறகு பிரதமரை வரவழைத்து அவர் முன்னிலையில்  செஸ் போட்டிகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார். அதோடு, பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது வெள்ளைக் குடை கொடுத்தார். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரியாகவும், ஆளும் கட்சியான பிறகு வேறு மாதிரியாகவும் அக்கட்சி நடந்து கொள்ளும்.

அண்மையில் காங்கிரஸ் மாநாடு நெல்லையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சோடங்கர், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 117 இடங்களில் போட்டியிடும் என்று கூறி இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி கடலூரில் பேசும்போது, கடந்த 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அவர்கள் சாறை குடித்து விட்டு சக்கையைத்தான் எங்களுக்குத் தருகிறார்கள். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்று கூறி இருக்கிறார். ஆனால், இதுபற்றி எல்லாம் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

எனது சமீபத்திய டெல்லி பயணம் குறித்து நான் முன்கூட்டியே தெரிவித்து விட்டுத்தான் சென்றேன். கடந்த 16-ம் தேதி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு காரில்தான், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்திக்க நான் சென்றேன். என்னுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் வந்தார்கள். நாங்கள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

அதேபோல், அன்றைய இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் அரசு காரில்தான் சென்றேன். அப்போதும் என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வந்தனர். நாங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்துக் கொண்டிருந்தபோது நேரம் ஆகிவிட்டதால், என்னுடன் வந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள். அதன்பிறகு, நான் 10-20 நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு பின்னர் கிளம்பி வந்தேன்.

நான் அரசு காரில் வரும்போது முகத்தை துடைத்ததை, முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் இவ்வாறு அவதூறு செய்திகளை வெளியிடுவது வேதனையாக உள்ளது. இந்திய ஊடகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழக ஊடகங்கள் இப்படி தரம் தாழ்ந்து செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? பரபரப்பான செய்தி கிடைக்கவில்லை என்பதற்காக இதை பரபரப்பாக்குவதா? ஊடகங்கள், பத்திரிகைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஒரு தலைவரை கட்சியின் பொதுச் செயலாளரை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாக சித்தரிப்பது சரியல்ல. இதை பத்திரிகைகள் உணர வேண்டும்.

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலினும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்ததாகப் பேசி இருக்கிறார். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அரசாங்க காரில் சென்று வந்ததை முதல்வர் இப்படி பேசலாமா? முகத்தை மூடிக் கொண்டு செல்ல என்ன இருக்கிறது? பகிரங்கமாகத்தானே உள்ளே சென்றேனே. ஒரு முதல்வர் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். அதனால்தான் அவரை ‘பொம்மை முதல்வர்’ என்கிறோம்.

அவரிடம் சரக்கு இல்லை. எங்களை குற்றம் சொல்வதற்கு அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அப்படி நடக்கவும் இல்லை. எங்கள் ஆட்சி சிறப்பாக இருந்தது. அதனால்தான் அதில் குற்றம் குறை கண்டுபடிக்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக முதல்வர் இப்படி பேசுவது முதல்வருக்கு அழகல்ல. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வருத்தத்தோடு ஒன்றை சொல்கிறேன்…. இனி ரெஸ்ட் ரூம் போனால் கூட சொல்லிவிட்டு போக வேண்டிய நிலைமைக்கு இன்றைய அரசியல் உள்ளது. அச்சத்தின் அடிப்படையில் இதை சொல்கிறேன், இதே ஸ்டாலின், நான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சமயத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். யார் சட்டையை கிழித்துக்கொண்டு வருவார்கள்?  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் கிழித்துகொண்டு வருவார்கள். அப்படிபட்ட நிலையில் இருந்தவர் இன்று என்னைப்பற்றி பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

நான் தும்பினால் கூட விவாத மேடை வைக்கிறீர்கள். இப்படி என்னை அடையாளம் காட்டுவதற்கு நன்றி.  அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று அமித்ஷா சொன்ன பிறகும், இவரை அழைத்து பேசுகிறார்… அவரை அழைத்து பேசுகிறார் என்று சொல்கிறார்கள். இதற்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன். மீண்டும் யாரும் தயவு செய்து இப்படி செய்தி வெளியிடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “என்னுடைய எழுச்சி பயணம் சிறப்பாக இருப்பதாக அமித்ஷா பாராட்டினார். எத்தனை தொகுதி சென்றிருக்கிறீர்கள் என்று அமித்ஷா கேட்டறிந்தார்” என்று குறிப்பிட்டார்.

“கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டவர்கள் மீது சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம், வேறு வழியில்லை” என்று செங்கோட்டையன் விவகாரம் குறித்து அவரது பெயரை குறிப்பிடாமல் பேசிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுக்கும் கடுமையான ரிப்ளை கொடுத்தார்.

”19.12.2011 அன்று அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே டிடிவி தினகரனை  அம்மா  நீக்கினார். அம்மா இறந்த பிறகு இறுதிச்சடங்கிற்கு வந்தார். அவரெல்லாம் என்னை பற்றி பேசுகிறார். எந்த உள்நோக்கத்தின் அடிப்படையில் பேசுகிறார் என எனக்குத் தெரியவில்லை. தேவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று நான் பேசிய பிறகு இப்படியெல்லாம் பேசுகிறார். இதில் என்ன உள்நோக்கம் என எனக்கு புரியவில்லை” என்று குறிப்பிட்டார்.