கடந்த செப்டம்பர் 18 தேதியிட்ட நமது அரசியல் டுடே இதழில், ‘அரசு காரில் இன்பச் சுற்றுலா… புகார் வளையத்தில் போடி கமிஷனர்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் எரிபொருளில் கேரளாவுக்கு தனது குடும்பத்தினரோடு, இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி என்ற குற்றச்சாட்டுகள் பற்றி விரிவாக எழுதியிருந்தோம்.
நமது இதழ் வெளியான நிலையில், போடி கமிஷனர் பார்கவி மீது நம்மிடம் புகார்களை அடுக்கிய இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன் நம்மைத் தொடர்புகொண்டார்.
”சார்… அரசியல் டுடே வெளியிட்ட செய்தி நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் வரை கடுமையான தாக்கத்தை அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல… செய்தி வெளியானவுடன் போடி நகராட்சியின் முன்னாள் சேர்மன், இப்போதைய சேர்மன் என இரு தரப்பினரும் என்னைத் தொடர்புகொண்டனர்.
‘அந்தம்மா இப்பதான் வந்திருக்காங்க. இதை ஏன் பெருசுபடுத்துறீங்க. விஷயம் இப்ப ஓபிஎஸ் அய்யாவரைக்கும் போயிருச்சு… அந்த செய்தியை எப்படியாவது டிஜிட்டல்லேர்ந்து நீக்க முடியுமா?னு கேட்டாங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாதுனு சொல்லிட்டேன்.
இந்த நிலையில்தான் அரசு காரை கேரள சொகுசு சுற்றுலாவுக்கு பயன்படுத்திய போடி கமிஷனர் பார்கவியை, தேனி நகராட்சி கமிஷனராக பதவி உயர்வோடு டிரான்ஸர் போட்டிருக்காங்க” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் தொடர்ந்த அவர், “அரசு காரை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியது… மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது என கடுமையான புகார்கள் பார்கவி மீது எழுந்தன. ஆனால், இதுபற்றி முறையாக விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக… போடி நகராட்சி விவகாரத்தில் இருந்து பார்கவியை காப்பாற்றும் விதமாக அவரை தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு மாற்றியுள்ளனர்.
தேனி அல்லிநகரம் தேர்வு நிலை நகராட்சி. இந்த நகராட்சியில் பணியாற்றும் ஆணையருக்கு மாத ஊதியம் ஒரு லட்ச ரூபாயிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வரையாகும். போடி நகராட்சி ஆணையருக்கு ஒரு லட்ச ரூபாய் இருந்து ஒன்னே கால் லட்சம் வரைதான் ஊதியம். போடிநாயக்கனூர் நகராட்சியை விட தேனி அல்லிநகரம் தேர்வு நகராட்சி பெரியது.
ஆக அரசு கார், துப்புரவு பணியாளர்களை தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதற்காக… சம்பள உயர்வோடு கூடிய பதவி உயர்வு அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று நினைத்தால் பரிசு அல்லவா வழங்கப்படுகிறது” என்றார் வேதனையாக.
