திருச்சியில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த மதிமுக அண்ணா பிறந்தநாள் மாநாட்டில்… தலைமையுரை ஆற்றிய பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன் “தத்துவக் கவிஞர் குடியரசு மறைவுக்கு பின் என்னைதான் தலைமைக் கழக பதவிக்கு வைகோ திட்டமிட்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த மல்லை சத்யா, ‘நீங்கள்தான் அந்த பதவிக்கு உரியவர். ஆனாலும் நான் தான் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு வரவேண்டும், அதனால் எனக்காக விட்டுக் கொடுங்கள் என்று கெஞ்சினார். நான் அவருக்கு விட்டுக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு அதை தக்க வைக்க தெரியவில்லை.
அவர் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டுவிட்டார்” என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து மல்லை சத்யா பதிலளித்துள்ளார்.
”அண்டப் புலுகு ஆகசப் புலுகு என்று என் குறித்து பொய்யான தகவல்களை பேசி உள்ளார் டாக்டர் கிருஷ்ணன். வழக்கமாக அவர் அப்படி பேசுபவர் அல்ல .
விசயம் இதுதான் 2004 ஆம் ஆண்டு மதிமுக உட்கட்சி தேர்தலின் போது துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தலைவர் வைகோ அவர்கள் அவருக்கு கொடுக்க இருந்ததாகவும் நான் பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன் அவர்களை சந்தித்து எனக்கு அந்த பொறுப்பை விட்டுக் கொடுக்க கேட்டதாகவும் பேசியுள்ளார்.
ஆனால் என் பொருட்டு அண்ணன் பாலவாக்கம் சோமு அவர்கள்தான் தலைவர் வைகோ அவர்களை வேலூர் சிறைச்சாலையில் சந்தித்து கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக சிறப்பாக பணியாற்றி வரும் மல்லை சத்யாவிற்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும் என்று கேட்டதாகவும் அதையே மற்ற முன்னணியினர் சொன்னதாகவும் தலைவர் வைகோ அவர்களே சொல்லி உள்ளார்.
அப்போதும் நான் அந்த பொறுப்பை ஏற்க மறுத்து என்னைவிட தகுதியானவர்களுக்கு கொடுக்க சொன்னபோது அண்ணன் எல்ஜி அவர்களும் செஞ்சியார் அவர்களும் கழகத்தின் மூத்த முன்னோடி அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் ஒருவர் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீர்காழி அண்ணன்
திரு சுப்புரவேலு அவர்கள் இருக்கின்றார்.
அவரின் முதுமையின் காரணமாக உடல்நலம் ஒத்துக்கொள்ள வில்லை எனவேதான் உன்னை தேர்வு செய்து உள்ளோம் என்றனர். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடமை உணர்வோடு நிறைவாக பணியாற்றி உள்ளேன் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இது வரை நான் தலைவர் வைகோ அவர்களிடமே எந்தப் பொறுப்பையும் கேட்டது இல்லை. மாமல்லபுரம் பேரூர் கழக செயலாளர் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பை என் அரசியல் ஆசான் மானமிகு மதுராந்தகம் சி ஆறுமுகம் அவர்கள் வழங்கியது முதல் கட்சியின் இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தகுதியின் அடிப்படையிலேயே நான் பெற்றேன் என்பதை தலைவர் வைகோ அவர்கள் பேசியுள்ளார்.
அந்த பொறுப்பையும் நான் தவறாக பயன்படுத்தியவன் அல்ல. நிலைமை இப்படி இருக்க எனக்கு பொறுப்பு கேட்டு யாரிடமும் காவடி தூக்கி பரிந்துரைக்க கேட்டது இல்லை.
நிலைமை இப்படி இருக்க தற்போது மகன் திமுக முதன்மைச் செயலாளர் துரை அவர்களின் தூண்டுதலின் பேரில் டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் இந்த அபாண்டமான பொய்யை பேசியுள்ளார்.
நான் அறிந்த வரையில் டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
அவருக்கு இருக்கும் ஆற்றலுக்கு அறிவிற்கு தொண்டர்களை அரவணைப்பதில் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று வழக்குகளை எதிர் கொண்டதில் பேச்சில் எழுத்தில் களப் பணியாற்றுவதில் வல்லவரான டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் மகன் திமுகவிற்கு தலைவராக ஏன் பொதுச் செயலாளராக ஆகக் கூடிய தகுதி நிரம்பப் பெற்றவர்.
ஆதிக்க வர்க்க சிந்தனை மகன் திமுகவில் வேரூன்றி உள்ள நிலையில் எல்லா பொறுப்புக்கும் எல்லோரும் வந்துவிட முடியாது என்பதற்கு நானே சாட்சி
இந்தப் படிநிலை சாதிய கட்டமைப்பில் இந்த சாதியினர்தான் சம்பந்தப்பட்ட பொறுப்பிற்கு வரமுடியும் என்ற நிலை.
எல்லா தகுதிகளும் ஒருங்கே பெற்ற டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் தற்போது உள்ள நிலையில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கே தகுதியானவர் ஆனால் மதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி என்பது நிரந்தரமாக வைகோ அவர்களுக்கு மட்டும்தான் என்பது விழுமிய ஜனநாயகம்.
மற்ற பொறுப்புகளும் இந்த இந்த சாதியினருக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டதால் என்னதான் டாக்டர் கிருஷ்ணன் அவர்களுக்கு ஆற்றல் தகுதி இருந்தும் தற்போது உள்ள நிலையில் காலியாக உள்ள துணை பொதுச் செயலாளர் பொறுப்பையாவது காலம் நீட்டிப்பு செய்யாமல் உடனடியாக வழங்கி, இழந்த கட்சியின் அங்கீகாரத்தை பெற வேண்டுகின்றேன்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.