அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் தொடங்கிய தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மூன்றாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மை நல பிரிவு பொருளாளரும், முன்னாள் மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான ஜான் மகேந்திரனிடம் நமது அரசியல் டுடே சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் சுற்றுப் பயணம் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
எடப்பாடியாரின் சுற்றுப் பயணம் இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் எந்தத் தலைவரும் நிகழ்த்தியிராத ஒரு சாதனை. கட்சி ரீதியாக மட்டுமல்ல… தனிப்பட்ட முறையிலும் தமிழ்நாட்டில் இதுவரை எந்தத் தலைவரும் இவ்வளவு நீண்ட, தொடர்ந்த, ஓய்வில்லாத சுற்றுப் பயணத்தை நடத்தியதில்லை.
ஜூலை 7 ஆம் தேதி எடப்பாடியார் பயணத்தைத் தொடங்கியது முதல் இப்போது வரை மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஃப்ளோ எனப்படும் மக்களின் பங்கேற்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த பயணம் எதிர்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடியின் பிரச்சாரப் பயணத்தில் திரளும் கூட்டமும் பேசுபொருளாக இருக்கிறது. அதேநேரம் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறதே…
எடப்பாடியாரின் பிரச்சாரப் பயணத்தில் கட்சி நிர்வாகிகள் மூலமாக கட்சித் தொண்டர்கள் திரள்கிறார்கள். அதேநேரம் மக்கள் யாருடைய தூண்டுதலும் இல்லாமல்… எடப்பாடியாரின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக தன்னெழுச்சியாகத் திரள்கிறார்கள். இதை நாங்கள் பிரச்சாரப் பயணங்களில் கண் கூடாக கண்டோம்.
எடப்பாடியார் வரும் வழியில் வீட் டு வாசல்களில் நின்று மக்கள் வரவேற்கிறார்கள்.
அண்ணன் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்கும் விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வந்ததை பார்த்து பொதுச் செயலாளரே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இதேபோல்தான் எல்லா மாவட்டங்களிலும்.
பொதுமக்களிடம் எடப்பாடி இந்த அளவுக்கு ரீச் ஆக என்ன காரணம்?
எடப்பாடியாரின் மீதான அன்பும் அக்கறையும் அவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நிர்வாகமும்தான்.
இப்போது தனது சுற்றுப் பயணத்தில் மாநில அளவிலான பிரச்சினைகளை மட்டுமன்றி. அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் பிரச்சினைகளையும் எடுத்துப் பேசுகிறார். அடுத்து வர இருக்கிற அதிமுக ஆட்சியில் இதற்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கிறார்.
இதனால்தான்… மக்கள் எடப்பாடியாரின் பிரச்சாரங்களுக்கு தானாகவே கூடுகின்றனர், அந்தந்த ஊர்களில் பிரச்சினையை சந்திக்கிற தொழில் அமைப்பினர் எடப்பாடியாரை தேடி வந்து தங்கள் குறைகளை சொல்கின்றனர். ஆனால் இவ்வளவு வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் வேறு விதமாக திசை திருப்பப் பார்க்கின்றன.
எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஆம்புலன்ஸ் சர்ச்சை கூட வெடித்ததே?
இவை அனைத்துக்கும் காரணம் இப்போதைய திமுக அரசுதான்.
எடப்பாடியாரின் பிரச்சாரப் பயணங்களுக்கு அனுமதி தர இழுத்தடிப்பது முதல் பல்வேறு கெடுபிடிகளை காவல்துறை செய்து வருகிறது. எடப்பாடியாரின் கூட்டத்துக்கு செல்லும் வேன்களைத் தடுப்பது, டிராவல்ஸ் காரர்களை மிரட்டுவது என்று திமுக அரசு பல்வேறு வகைகளில் இறங்கி மலினமாக செயல்பட்டும் மக்களிடம் எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பகுதியை விட அடுத்த பகுதிகளில் மக்களின் பங்கேற்பு பிரச்சாரப் பயணங்களில் அதிகமாகிவிட்டது.
இதையெல்லாம் திசை திருப்பத்தான் ஊடக விவாதங்களில் இருந்து மடை மாற்றத்தான் திமுக அரசு அற்பத் தனமான ஆம்புலன்ஸ் விவகாரங்களை கையிலெடுத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது.
இவ்வளவு வெற்றிகரமான சுற்றுப் பயணம் என்று சொல்கிறீர்கள். அதேநேரம் உட்கட்சிக் குழப்பங்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே?
அதெல்லாம் கட்சியில் ஒரு குழப்பமும் இல்லை. செங்கோட்டையன் அவர்கள் கிளப்பிய சலசலப்பு எத்தனை நாட்களுக்கு நீடித்தது? அவர் பின்னால் எத்தனை பேர் நின்றார்கள்? இது எல்லாமே ஊடகங்களை வைத்துக் கொண்டு திமுக போடும் நாடகம். செங்கோட்டையனுக்குப் பின்னால் திமுகதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக மிக பலமான மக்கள் சக்தியோடு பயணிக்கும் நிலையில், அந்த செய்திகளை திசை திருப்ப திமுகவே இதையெல்லாம் செய்கிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தன் மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்திவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கான குடும்ப நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இதற்காக என்ன விலை கொடுக்கவும் திமுக தயாராக இருக்கிறது. அதனால்தான் அதிமுகவில் இதுபோன்ற குழப்பங்களை உருவாக்க திமுக தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால் திமுக இதில் தோற்றுக் கொண்டேதான் இருக்கும், தேர்தல் வரை.
அதிமுகவில் செய்வது போலவே… பாமகவிலும் தனது கூட்டணிக் கட்சியான மதிமுகவிலும் சகுனி வேலைகளை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது திமுக.
இதையெல்லாம் தாண்டி மக்கள் சக்தியால், தனது ஆக்கபூர்வமான உழைப்பால் எடப்பாடியார் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார்.
எடப்பாடியாரின் டெல்லி பயணம், அமித் ஷா சந்திப்பு ஆகியவையும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே…
இதுபோன்ற செய்திகளை உற்பத்தி செய்து பரப்புவது திமுகதான். ஒரு கட்சியை இன்னொரு கட்சி அழிக்க முடியாது. மேலும் அதிமுகவில் இப்போது எந்த ஸ்பிளிட்டும் இல்லை. அதிமுக எடப்பாடியார் தலைமையில் உறுதியாகவும் முழு பலத்தோடும் இருக்கிறது.
எங்களுடைய அதிமுக கட்சியின் பூத் கமிட்டிகள் மிக வலிமையாக அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக அளவுக்கு எந்த கட்சியும் பூத் கமிட்டி அமைக்கவில்லை. உண்மையில் திமுக கூட அந்த அளவுக்கு அமைக்கவில்லை.
எடப்பாடியார் பூத் கமிட்டிகளை தமிழ்நாடு முழுதும் அமைத்து சரிபார்த்த பிறகுதான், பிரச்சாரப் பயணத்தில் இறங்கியிருக்கிறார். கூட்டணி வியூகத்தை அமைத்திருக்கிறார். எனவே எடப்பாடியாரின் டெல்லி பயணம் வெற்றிதான்.
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடி மனு கொடுத்திருக்கிறார். முக்குலத்து ஓட்டுகளை கவர்வதற்கான உத்தியா இது?
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு தேசியவாதி. சுதந்திரப் போராட்ட வீரர். தமிழகத்திலேயே அதிக நாட்கள் சிறையில் இருந்த தியாகி. பட்டியல் சமுதாயத்தினரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தேவர். அவரை சாதி சிமிழுக்குள் அடைக்க முயலுவது வேதனையை அளிக்கிறது.
அவரைப் போலவே வ.உ.சி, வீரன் சுந்தரலிங்கம், மருது பாண்டியர் தொடங்கி காமராஜர் வரை சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதிக்குள் அடைத்துப் பார்ப்பது, சாதியை வைத்து பிழைக்கும் சில சுய நல ஆசாமிகள்தான் இதையெல்லாம் தூண்டுகிறார்கள். ஆனால் அதிமுக அவர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து அவர்களின் பெயர்களை சூட்ட பல ஆண்டுகளாக கோரி வருகிறது. இதேபோல தூத்துக்குடி விமான நிலையம் உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களுக்கும் வேறு சில தலைவர்களின் பெயரை சூட்டலாம்.
தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் ஒரு மெகா ஸ்டார். சிரஞ்சீவிக்கு கூடியது போல கூட்டம் கூடுகிறது. அவர் அதை ஓட்டாக மாற்ற திமுக விடாது. எங்களை மாதிரி, தேர்தல் அனுபவஸ்தர் கூட சேர்ந்தால்தான் விஜய் தன் பலத்தை தனக்கு தேர்தல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அவர் பிரிக்கக்கூடிய ஒட்டுகள் திமுக ஓட்டுகளைதான். எனவே விஜய் தனியாக நின்றாலும் எங்களது பிளஸ்தான்…அவர் எங்களிடம் வந்தாலும் எங்களுக்கு பிளஸ்தான். அந்த கணக்கு எங்களுக்கு தெரியும். திமுக ஒரு மாயையில் இருக்கிறது. அந்த மாயை தேர்தலில் வீழ்த்தப்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியார் முதல்வராக 2026 இல் அமர்வார்…” என்று நம்பிக்கையாக பேட்டியை நிறைவு செய்தார் ஜான் மகேந்திரன்.
