திண்டுக்கல்லில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர்கள் மற்றும் பாதிரியாருக்கு திமுகவினர் போஸ்டர் அடித்து மிரட்டல் விட்டுள்ளனர். இதனால், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களைக் காப்போம் ..தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுதும் நடத்தி வருகிறார். இந்த வகையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் பயணம் மேற்கொண்டார் எடப்பாடி.
அன்று காலை திண்டுக்கல்லில் இருக்கும் வர்த்தகர் சங்கம்,பேராயர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் பேசிய முருகேசன், “சொத்துவரியை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கின்றனர். இதே நிலை சென்றால் சொத்தை விற்றுதான் சொத்துவரி கட்டவேண்டும். 100 சதவீதத்திற்கு மேல் சொத்துவரி அதிகரித்துள்ளது. மாநகராட்சியில் ஏழு வகையான வரிகளை ஒன்று சேர்த்து ஒரே வரியாக கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் கிருபாகரன் பேசுகையில், “திண்டுக்கல் பேருந்து நிலையத்தை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை விரைவுபடுத்த வேண்டும். தொழில் உரிமம் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்றார்.
ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜ்குமார் பேசுகையில், “ஹோட்டல் தொழிலுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ரவுடிகள் தொந்தரவு அதிகம் உள்ளது. உங்கள் ஆட்சி வந்தவுடன் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.
திண்டுக்கல் ஆயர் பேரவை சார்பில் பாதிரியார் அமல்தாஸ் பேசும்போது, “வன்னிய கிறிஸ்தவர்களை எம் .பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கிறிஸ்துவ மக்களுக்கு நன்மைகள் செய்துள்ளனர். அ.தி.மு.க.ஆட்சியில் கிறிஸ்துவ மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன” என்றார்.
இந்நிலையில் கூட்டம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் திடீரென திண்டுக்கல் நகர் முழுவதும் திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்க மண்டல தலைவர் கிருபாகரனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போஸ்டரில் தொழில் வர்த்தக சங்கத்தை அதிமுகவுக்கு அடகு வைத்த கிருபாகரனே பதவி விலகு என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதே போல பாதிரியார் அமல்தாஸ்க்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. அதில் மதவாத பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய பாதிரியார் அமல்தாஸ், எந்த அனுமதியும் ஆயரிடம் வாங்கவில்லை என குற்றம் சாட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில் வர்த்தக சங்க மண்டலத் தலைவர் கிருபாகரனிடம் அரசியல் டுடே சார்பில் பேசினோம்.
”எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் எங்கள் கோரிக்கையை வைத்தோம். அப்போது அவரை வாழ்த்தி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதே போல தற்போதைய முதலமைச்சர் மு .க ஸ்டாலின் , எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பாதயாத்திரை திண்டுக்கல் வந்தபோது வர்த்தக சங்கம் சார்பில் சந்தித்து நீங்கள் தான் முதல்வர் என வாழ்த்தினோம்.
அப்போது எங்களுக்கு அதிமுக சார்பில் எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் தற்போது திமுகவினர் மறைமுகமாக எங்கள் மீது களங்கம் சுமத்துவதற்கு ஏற்பாடு செய்து, தொடர்ந்து பொய்யான அவதூறுகளை போஸ்டர் மூலம் அடித்து ஒட்டி வருகின்றனர். இது வர்த்தகள் இடையே ஒற்றுமையை குலைப்பது மட்டுமில்லாமல். பேச்சு சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது.
திமுக அமைச்சரோ, மாவட்டச் செயலாளரோ, இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கட்சியில் இருக்கும் சிலர் இது மாதிரி செய்வதாக எங்களுக்கு தெரிகிறது. இதற்கு வர்த்தக சங்கத்தை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்” என்றார்.
இதுகுறித்து பாதிரியார் அமலாதாஸ்சிடம் அரசியல் டுடே சார்பில் பேசினோம்.
”நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் சில நன்மைகள் கிடைத்தது என்பதை தான் எடுத்துரைத்தேன். வன்னிய கிறிஸ்தவர்கள் எம் .பி. சி. பட்டியில் சேர்க்க சொல்லித்தான் கோரிக்கை வைத்தேன். இதற்காக சிலர் எனக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. திமுகவினர் இது மாதிரி மிரட்டலில் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.
இது குறித்து பங்கேற்ற பல சங்க நிர்வாகிகளிடம் கேட்டோம்,
“எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அமைப்பினர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக பேசியது உளவுத்துறை மூலம் முதலமைச்சர் பார்வைக்கு சென்றுள்ளது. இது திமுக வினருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
இதனால் எடப்பாடி கூட்டத்தில் பங்கேற்று பேசியவர்களுக்கு, ஏதாவது ஒரு வகையில் இடைஞ்சல் வரலாம் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றனர்.
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சினைகளை எடுத்துச் சொன்னவர்களை மிரட்டும் வேலையையே திண்டுக்கல் திமுகவினர் செய்துகொண்டிருக்கிறார்கள்.
