தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் திமுகவை சேர்ந்த பொன்.சந்திரகலா என்பவர் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே பேரூராட்சி தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தொடர்ந்து தலைவர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கான கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் 4 மாதங்கள் கழித்து ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் நடைபெறுவதாக இன்று அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பேரூராட்சி கூட்ட அரங்கில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் உள்பட 5 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சிறிது நேரம் காத்திருப்புக்கு பின்னர் போதிய நேரமில்லாததால் பேரூராட்சி கூட்டம் மறு தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைப்பதாக செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையேயான பனி போர் நீடித்து வருவதால் வார்டு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.