குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார். அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தரும் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு விஜய் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லை பகுதியில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

குமரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட குழித்துறை சந்திப்பு, மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அழகிய மண்டபம் சந்திப்பு பகுதிகளில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்ற தகவல் உள்ளது. மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நாகர்கோவில் மாநகர பகுதியில் விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர்.
டெரிக் சந்திப்பு, செட்டி குளம் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, நாகராஜா கோவில் திடல் பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் விஜய் தனது சுற்றுப்பயணத்தின்போது 3 இடங்களில் பேசுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
காவல்துறை எந்த இடத்தில் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறார்களோ அந்த இடத்தில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கும், அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. பொதுமக்கள் மத்தியிலும்
ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.