தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் காலனி பகுதியில் கடந்த 2005.ம் ஆண்டு புதிதாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு அங்கு தற்போது 20.க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கன்வாடி மையம் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டும் முறையாக அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளாமல் அதிகாரிகள் முறைகேடில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் சேதமடைந்த அங்கன்வாடி மையத்தின் மேல் கூரை நேற்று இரவு இடிந்து விழுந்து உள்ளது.
இதில் சமையல் அறையில் ஸ்டவ் மற்றும் பாத்திரங்கள் சேதமடைந்தது. இரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இன்றி காணப்படுகின்றது.
மேலும் மையத்தின் அருகே கழிவறை தொட்டி திறந்த வெளியில் கிடப்பதால் குழந்தைகள் தொட்டிக்குள் தவறி விழும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.

இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி காணப்படுவதாக குழந்தைகளின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முதலமைச்சரின் தொலைபேசி புகார் எண் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சேதமடைந்த நிலையில் காணப்படும் அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் பகுதி நேரமும் அருகில் உள்ள சாவடியில் பகுதி நேரமும் அமர வைத்து பாடம் எடுக்கும் அவல நிலை காணப்படுகின்றது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதில் அச்சப்படுவதுடன், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகவும் கருதி வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.