• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை?

ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழகத்தில் கடந்த மே , ஜூன் மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2ஆவது அலையை தமிழக சுகாதாரத் துறை உள்பட கொரோனா முன்களப் பணியாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் 3ஆவது அலை வந்தாலும் தமிழகம் தயார் நிலையில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. அவ்வாறிருக்கும் போது கடந்த மாதம் 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் வேரியண்ட் பரவி வந்தது. இதனால் அந்த நாட்டில் கொரோனா 4ஆவது அலை உருவானது.


இந்த ஓமிக்ரான் டெல்டாவை விட வீரியமிக்கது என்பதால் அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டின. விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.


எனினும் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்ளில் ஓமிக்ரான் பாதிப்பு இருந்தது. இதையடுத்து நேற்றைய தினம் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை மறுநாளுடன் முடிகிறது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டு பிறப்பையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது என அறிவிக்கப்பட்டது. அது போல் இந்த ஆண்டும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.