நாட்டின் 15ஆவது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி உட்பட பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், தனது பதவியை ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அப்பதவிக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
