பாமகவின் செயல் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கம் செய்வதாக பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில் அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என தெரிவித்துள்ள ராமதாஸ், அன்புமணி உடன் உள்ளவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்க தயார் எனவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ்..,
“கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். பாமக தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி. பாமகவைச் சேர்ந்த யாரும் அன்புமணியுடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்
