தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் ஒரு குண்டு மணியாவது தங்கம் வாங்கும் வகையில் விலையை குறைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று செப்டம்பர் 8 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 80 ஆயிரத்து 480 ரூபாயாக இருந்தது. இன்று செப்டம்பர் 9 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 81 ஆயிரத்து 200 ஆக உயர்ந்திருக்கிறது. ஆவணி மாதம் திருமண முகூர்த்தங்கள் நிறைந்த மாதமாக இருக்கும் நிலையில் தங்கத்தின் விலை விர்ர்ரென ஏறிக் கொண்டிருப்பது ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுகுறித்து கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
“ தங்கம் விலை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதேபோன்று தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தால் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக போய்விடும். விசேஷ நாட்கள் மற்றும் இல்ல திருமண நிகழ்ச்சி போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்க வேண்டும் என்பது ஒரு பெரிய கனவாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது தங்கம் விலை உயர்வால் அது சாத்தியமில்லாத நிலையை எட்டியிருக்கிறது.
இந்திய குடும்பங்களில் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டுமென்பது கட்டாயமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. தங்கம் விலை உயர உயர பதுக்கல் காரர்களும் அதிகமான தங்கத்தை புழக்கத்திலிருந்து எடுத்து பதுக்கவும் வாய்ப்புகள் அதிகமாகும். தங்கம் விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள் தான். எவ்வளவு விலை உயர்ந்தாலும் பணத்தை கடனாக அதிக வட்டி கொடுத்து வாங்கியாவது அத்தியாவசிய தேவைக்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். தங்கம் விலை இதேபோன்று தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால் பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறிவிடும். இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி தங்கத்தினுடைய விலையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.
தங்கம் விலை குறித்து பெரும்பாலான அரசியல் கட்சியினர் மௌனம் சாதித்து வரும் நிலையில், ஈஸ்வரனின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.