தலைநகரத்தின் தலையாக இருக்கும் அந்த அமைச்சர், நகரத்து அமைச்சர் மீது செம காண்டாக இருக்கிறாராம். தன்னை சந்திக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம், அந்த நகரத்து அமைச்சரை பற்றி நாராச நடையில் சென்னை பாஷையில் அர்ச்சனை செய்கிறாராம். ஏனென்றால்… சில வாரங்களுக்கு முன் நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் மொத்த பழியையும் தன் மேல் போட்டுவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டார் என்பதால்தான் இந்த கோபமாம்.
கை கட்சியின் மாநிலத் தலைவரின் பெயரில் கை இருந்தாலும், அவரது கைகள் டெல்லியால் கட்டப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் கதர்கள். பதவிக்கு வந்து வருடக் கணக்கில் ஆகியும் இன்னும் பத்து மாவட்டங்களுக்கு காலியாக இருக்கும் மாவட்டத் தலைவர் பதவிகளுக்கு கூட ஆட்களை நியமிக்க முடியவில்லை.
மாணிக்கமான அந்த தென் மாவட்டக்காரர் டெல்லியில் இருந்துகொண்டு தலைவருக்கு எதிராக மூவ்களை தெளிவாக செய்துவருவதால்தான், இந்த நிலையாம்.
தாமரைக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருக்கு தற்போது என்ன செய்வது என்றே தெரியாத திரிசங்கு நிலையில் இருக்கிறார்.
அவர் தலைவராக இருந்தபோது கட்சிக்குள் வந்தவர்களுக்கெல்லாம் இப்போது எந்த முக்கியத்துவம் இல்லாமல் அல்வா கொடுத்துவிட்டார் புதிய தலைவர். அதை பழைய தலைவரும் கண்டுகொள்ளாததால், அவரை நம்பி கட்சிக்கு வந்தவர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். இன்னமும் கட்சியில் பட்டும் படாமலும்தான் இருக்கிறார் முன்னாள் மலை
ஆளுங்கட்சி சார்பில் டிவியில் விவாதங்களில் கலந்துகொள்வதற்காக அறிவிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்களின் மீட்டிங் கடந்த வாரம் அறிவாலயத்தில் நடந்தது.
அதில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சியினரை அழைப்பதே இல்லை என்ற நிலை பற்றித்தான் விவாதிக்கப்பட்டதாம். மீடியாவை எல்லாம் கட்டுக்குள் வைத்திருக்கும் மாப்பிள்ளை நிறுவனம், ‘வர வர நம் பேச்சை மீடியா முதலாளிகள் கேட்பதில்லை’ என்ற ரிப்போர்ட் கொடுத்ததன் அடிப்படையில்தான் நித கூட்டம் கூட்டப்பட்டு அதில் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சிக்கே இந்த நிலையா என்று பலரும் அக்கூட்டத்தில் புலம்பியிருக்கிறார்கள்.