விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது…
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகளை வாங்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள், பூஜை பொருள்கள், விநாயகர் சிலைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சதுர்த்திக்கு பெரும்பாலானோர் வாங்கும் செவ்வந்திப் பூ கிலோ 400 ரூபாய்க்கும் அரளிப் பூ கிலோ 300 முதல் 350 ரூபாய்க்கும் விற்பனையாகின. அதுமட்டுமின்றி எருக்கம்பூ மாலை, அருகம்புல் கொத்து ஆகியவை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன.

அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் பலரும் பூ மார்க்கெட்டிற்கு வருகை புரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே சமயம் காவல் துறையினரும் போக்குவரத்தை உடனுக்குடன் சரி செய்து வருகின்றனர்.
மேலும் விநாயகர் சிலைகள் அரை அடி முதல் மூன்று அடிவரை பல வண்ணங்களில் பல விதங்களில் விற்பனைக்கு வந்திருந்தன. மேலும் விநாயகர் அழகு படுத்த தங்க நிறத்திலான குடைகள், அலங்காரம் மாலைகள், தோரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை வாங்க கூட்டம் அலைமோதுவதால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் கோவையில் களை கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.