மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருகின்ற 28ஆம் தேதி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் கோவிலின் அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்தவாறு மின்கம்பம் உள்ளதால் எப்போது வேண்டுமானால் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும் ஆபத்தான மின்கம்பத்தை சரி செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

மேலும் மின்கம்பத்தின் அடியில் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரீட் கொண்டு பள்ளத்தை சரிசெய்யாமல் அருகிலுள்ள மணலை வைத்து பள்ளத்தை மூடி சென்று விட்டதால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். இரண்டு தினங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை காண கோயில் அருகே கூடுவார்கள் என்பதால் பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.