மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலை அருகே கடந்த 5 ஆண்டுகளாக நர்மதா(40) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென கடைக்குள் புகுந்த இரண்டு நபர்கள் நர்மதா உள்ளிட்டோரை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளனர்.

இதை தட்டிகேட்ட கடை ஊழியர்களான முத்து, ரேனுகா, சித்ரா ஆகிய பெண்களையும் அடித்து கீழே தள்ளிவிட்டு நர்மதா மற்றும் அவரது மகனான வினோத் எனும் சிறுவனையும் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர். இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நர்மதா 100 க்கு அழைத்து புகார் செய்துள்ளார். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்திற்கு போலீசார் யாரும் வராததால் நர்மதா உள்ளிட்டோர் முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளனர். அப்போது கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர். மேலும் போலீசார் புகாரை வாங்காமல் உங்கள் மீது எப் ஐ ஆர் போடப்போவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சி சி டி வி காட்சிகளை போலீசாரிடம் காட்டிய பின்னரும் நடவடிக்கை எடுக்காததால் சி சி டி வி காட்சிகளை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் நிறுவனங்களுக்கு நர்மதா தரப்பில் அனுப்பியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளி வந்த பின்னர் மீண்டும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் நேற்று நர்மதாவை அழைத்து வீடியோவை வெளியிடக்கூடாது எனவும் மீறினால் உங்கள் மீது எப் ஐ ஆர் போடப்படும் எனவும் கூறி மிரட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு நாகமலை புதுக்கோட்டை பெண் ஆய்வாளர் ஒருவர் புகார் கொடுக்க வந்தவரிடம் லட்சக்கணக்கில்.பணம் வாங்கிய விவகாரத்தில் பெண் ஆய்வாளர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்த நிலையில் மீண்டும் நாகமலை புதுக்கோட்டையில் ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி புகார் கொடுக்க வந்த பாதிக்கப்பட்ட பெண்களையே மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.